×

நாச்சிக்குளத்தில் வடிகால் வசதியின்றி தேங்கிய மழைநீர் அகற்றம்

முத்துப்பேட்டை, டிச.19:நாச்சிக்குளத்தில் வடிகால் வசதியின்றி குளம்போல் தேங்கி நின்ற மழைநீர் தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிக்குளம் ரயில்வே கேட்டிலிருந்து பெரியபள்ளி வாசலுக்கு செல்லும் சாலை நாச்சிக்குளம் கிராமத்திற்கும் செல்லும் முக்கிய சாலையாகும். இவ்வழியாகத்தான் நாச்சிக்குளம் மட்டுமின்றி அதனை கடந்து செல்லும் பகுதிகளுக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்து செல்லும் திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை பணிக்காக ரயில்வே நிர்வாகம் சாலை மட்டத்தை உயர்த்தி தண்டவாளம் அமைத்தது. இதன் மூலம் இப்பகுதியில் இருந்த வடிகால் மூடப்பட்டது. இதனால் இப்பகுதியில் மழை பெய்யும் போது மழைநீர் மற்றும் அருகில் உள்ள குளத்தின் தண்ணீர் நிரம்பியதும் வடிய வழியின்றி சாலையில் தேங்கி விடுவது வாடிக்கையாக உள்ளது.

இதன் மூலம் சாலை முற்றிலும் சேதமாகி பல்லாங்குழியாக மாறியது. மழைநீரும் மாதக்கணக்கில் தேங்கி கிடந்து கழிவுநீராக மாறி தொற்றுநோய் பரப்பி வருகிறது. இதுகுறித்து இப்பகுதியில் வடிகாலை ஏற்ப்படுத்தி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக ரயில்வே நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.  இந்தநிலையில் தற்பொழுது ஒரு மாதமாக அடிக்கடி மழை பெய்து வருவதால் இந்த ரயில்வே தண்டவாளம் அருகில் இருந்த குளம் நிரம்பி சாலையிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வடிய வடிகால் இல்லாததால் அந்த தண்ணீரும் சாலையை ஆக்கிரமித்து முழங்கால் அளவில் தேங்கி நின்றது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஆமீனா அம்மாள் என்பவர் உடல் நல குறைவால் இறந்து விட்டார். அவரின் பிரேதத்தை அடக்கம் செய்ய பள்ளி வாசலுக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலை இந்த சாலையில் முழங்கால் அளவில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் தான் தோளில் சுமர்ந்து சென்றனர் என்றும், அப்பொழுது சாலையில் உள்ள பள்ளங்களால் மிகவும் சிரமம் ஏற்பட்டது என்றும் சுட்டிக்காட்டி கடந்த 16ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.  இதனையடுத்து நேற்று நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலையில் தேங்கிக்கிடந்த மழைநீரை வெளியேற்றினர். மேலும் இனி மழைநீர் தேங்காத வகையில் சீரமைத்து சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சிடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Tags :
× RELATED ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில் வழங்க வேண்டும்